சில சுவையான கதைகள் -II

அஹிம்சாவாதியும்.. அறிவியல் அறிஞரும்..
--------------------------------------------------------------------

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கும, காந்தியாருக்கும் நடந்த கடிதப் போக்குவரத்து....

அக்டோபர் 2, 1931. ஐன்ஸ்டீன் எழுதியது..

பெருமதிப்பிற்குரிய திரு. காந்தி!

என் இல்லத்திற்கு வருகை தந்திருக்கும் உங்கள் நண்பரின் வாயிலாக இந்தக் கடிதத்தை அனுப்ப விழைகின்றேன். உங்கள் வேலைகளின் மூலமாக நீங்கள் அஹிம்சை மூலம் வெற்றியடைய முடியும் என்று காட்டி இருக்கின்றீர்கள். அதுவும் இம்சையை நம்பி செயல்படும் மனிதர்களிடமும் அஹிம்சை காட்டி வெல்ல முடியும் என்று காட்டி இருக்கின்றீர்கள்.

உங்களின் எடுத்துக்காட்டு உங்கள் நாட்டின் எல்லைகளைத் தாண்டியும் பரவும் என்று நம்புவோம். அத்தகைய நம்பிக்கை பன்னாட்டு அதிகாரம் ஒன்று உருவாகவும், அனைவரும் மதிக்கும் படியும், போர் இல்லாமலேயே பிரச்னைகளைத் தீர்க்கும் விதமாகவும் உதவும்.

உண்மையும் வியப்புடனும்,
உங்கள்,
ஆ. ஐன்ஸ்டீன்

நான் உங்களை நேருக்கு நேர் சந்திக்க இயலும் என்று நம்புகின்றேன்.
_________________

காந்தியாரின் பதில்..

லண்டன், அக்டோபர், 18, 1931

அன்பு நண்பரே,

சுந்தரம் மூலம் தாங்கள் அனுப்பிய அழகிய கடிதத்தைக் கண்டு மகிழ்வுற்றேன். உங்கள் பார்வைக்கு என் காரியம் தென்பட்டது குறித்து மிகுந்த ஆறுதல் அளிக்கின்றது. நானும் உங்களை நேருக்கு நேர் அதுவும் இந்தியாவில் என் ஆசிரமத்தில் காண வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.

தங்கள் உண்மையுள்ள,
மோ.க. காந்தி.
------------------------------------------
மதிநுட்பம் இல்லாத மாநிலம்..

எஃப்.ஏ. தேர்வில் முதல் மாணவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் பீகாரைச் சேர்ந்த அந்த மாணவர். இதற்கு மாதம் இருபத்தைந்து ரூபாய் உபகாரச் சம்பளமாக வழங்கியது கல்லூரி. இந்த உதவித் தொகை தொடர்ந்து பல ஆண்டுகள் அவருக்குக் கிடைத்து வந்தது. பின்னர் பி.ஏ. தேர்விலும் முதல் மாணவராகத் தேர்வானார். உபகாரச் சம்பளம் மாதம் தொண்ணூறு ரூபாயாக உயர்த்தித் தரப்பட்டது.

இவ்வாறு முதல் மாணவராகவே படிப்பில் தேர்ச்சி பெற்றுக் கொண்டே அந்த மாணவர் வந்ததில் ஒரு சிறப்பு உண்டு. அந்தக் காலகட்டத்தில் பீகார் மாநிலம் வங்காள மாநிலத்தில் சேர்ந்திருந்தது. பீகார் மாநில மாணவர்கள் எல்லோரும் கொல்கத்தா பல்கலைக் கழகத்தில்தான் சேர்ந்து படிக்க வேண்டும்.

வங்க மொழி பேசுவோர் பீகாரிகளைப் படிப்பறிவு இல்லாதவர்கள், மதிநுட்பம் இல்லாதவர்கள் எனப் பேசுவார்கள். இப்படி கேவலமாய்ப் பார்ப்பதை மாற்றியமைக்க வேண்டும் என்ற வெறியோடுதான் அந்த மாணவர் படித்து முதல் மாணவராக வந்திருக்கிறார்.

அந்த மாணவர் யார் என்றுதானே கேட்கிறீர்கள்? இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திரபிரசாத்.
_____________________________________________

கோர்ட்டுக்குப் போன குதிரை!

நீதிமன்றத்திற்கு தினமும் இராஜாஜி தனது குதிரை வண்டியில் செல்வது வழக்கம். ஒருநாள் நீதிமன்றத்திற்குப் புறப்படும்போது வண்டியில் பூட்டிய குதிரையின் மீது புழுதியும் சாணமும் படிந்திருப்பதைக் கண்டார். குதிரையைக் குளிப்பாட்டி வரும்படி கூறினார்.

வண்டிக்காரன் குதிரையைக் குளிப்பாட்டி வண்டியில் பூட்டினான். இராஜாஜி ஏறி அமர்ந்தார். குதிரைக்காரன் ஏறி உட்கார்வதற்குள் குதிரை வண்டியை இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்கிவிட்டது. இராஜாஜியால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஏதாவது ஓர் இடத்தில் குதிரை களைப்படைந்து நிற்கத்தானே போகிறது என்ற நம்பிக்கையில் அமைதியாக உட்கார்ந்துவிட்டார்.

குதிரை ஓடி கடைசியாக ஓரிடத்தில் போய் நின்றது. அது எந்த இடம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். அது இராஜாஜி வழக்கமாகச் செல்லும் நீதிமன்றம்.


நன்றி:இன்று ஒரு தகவல். பொது அறிவு தனிஇனம் : ஒர்குட் குழுமம்

0 comments: